திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் ரகுபதி காலனியில் வியாபாரியான அப்துல் ரசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவைக்கு சென்று நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு பார்சலை வாங்கினார். அதில் 6 தங்க சங்கிலிகள் உள்பட 30 பவுன் தங்க நகைகள் இருந்ததாக தெரிகிறது. பின்னர் அப்துல் ரசாக் இரவு 11.15 மணியளவில் விமான நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது போலீஸ் உடை அணிந்து வந்த 3 பேர் அப்துல் ரசாக்கிடம் விசாரணை நடத்தி அவரை காரில் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பார்சலை பறிக்க முயன்றனர். அப்போது அப்துல் ரசாக் பார்சலை கொடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் மூன்று பேரும் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி 30 பவுன் தங்க நகை இருக்கும் பார்சலை பறித்துக் கொண்டு அப்துல் ரசாக்கை கொச்சி-சேலம் சாலையில் வைத்து காரில் இருந்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து அப்துல் ரசாக் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.