2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இருசர்வதேச மோதலுக்குப் பிறகு, சீன பிரஜைகளுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்தியது. இத்தடையை தொடர்ந்து, கோவிட் பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. பிற நாடுகளுக்கான விசா நடைமுறைகள் தொடங்கப்பட்ட போதும், சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவை தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான இராஜதாந்திர உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் சமீபத்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதுடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து உரையாடினார். இதனையடுத்து, சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சீனத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஜூலை 24 முதல் சீனர்கள் இந்தியா செல்ல சுற்றுலா விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பின்னர் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பீஜிங், ஷாங்காய், குவாங்சோ ஆகிய நகரங்களில் உள்ள இந்திய விசா மையங்களில் சமர்ப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் குவா ஜியாகுன், “இந்தியாவுடன் தொடர்ச்சியான ஆலோசனைகளுக்கு தயாராக உள்ளோம். மக்கள் இடையேயான பரிமாற்றங்களை எளிதாக்க விரும்புகிறோம்” என கூறியுள்ளார்.
