ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு முன்பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால், ‘இந்தியன் ஆயில் ஒன்’ (IndianOil One) செயலி பதிவிறக்கத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் விநியோகிக்கப்படும் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால், இந்தியா போன்ற இறக்குமதியை நம்பியுள்ள நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் உணவகங்கள் பலவும் மூடப்படும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் தற்போதைக்குக் கிடைத்தாலும், வருங்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். வழக்கமாகப் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள் (மூலம் முன்பதிவு செய்வதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாகக் கூறி, பொதுமக்கள் ஆயில் நிறுவனங்களின் செயலிகளைத் நாடத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தட்டுப்பாடு காரணமாக, கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியான ‘இந்தியன் ஆயில் ஒன்’ (IndianOil One), கடந்த சில நாட்களாக அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலக அளவில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்து வந்த பிரபல ஏஐ (AI) செயலியான சாட்ஜிபிடியை (ChatGPT) பின்னுக்குத் தள்ளி, இந்தியன் ஆயில் செயலி இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய போர் சூழலில் இந்திய மக்களின் அடிப்படைத் தேவையாக எரிபொருள் மாறியுள்ளதையே இந்தத் தொழில்நுட்பத் தரவுகள் உணர்த்துவதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
