தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரியில் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டார். காரைக்குடி பயணத்தைத் தொடர்ந்து கன்னியாகுமரி வந்த அவர், மகாதானபுரம் சந்திப்பு முதல் ஜீரோ பாயிண்ட் வரை விசிலடித்தபடி சைக்கிள் ஓட்டியும், திறந்த வாகனத்தில் நின்றபடியும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பேசிய விஜய், தவெக ஆட்சிக்கு வந்தால் ‘தமிழ்நாடு சிட்டிசன் கார்டு’ (Tamil Nadu Citizen Card) வழங்கப்படும் என்ற அதிரடி வாக்குறுதியை அளித்தார்.
இந்த கார்டு மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் தரவுகளும் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்டு, ஏஐ (AI) தொழில்நுட்ப உதவியுடன் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களின் வீட்டு வாசலுக்கே நேரடியாக வந்து சேரும் என்று அவர் உறுதி அளித்தார்.
கடுமையான வெயிலால் கூட்டத்தில் இருந்த இருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், விஜய்யைக் காண மாவட்டம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் குவிந்ததால் கன்னியாகுமரி பகுதியே ஸ்தம்பித்தது.
