நடந்து முடிந்த 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளதை, இந்திய எல்லைகளையும் தாண்டி அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வசிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், ஆர்சிபி அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த இரண்டாவது ஐபிஎல் கோப்பை வெற்றியைத் தங்களது சொந்த நாட்டு வெற்றியைக் கொண்டாடுவது போல எகிறிக் குதித்துக் கொண்டாடியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், அந்த ரசிகர்கள் ஆர்சிபி அணியின் ஜெர்சி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஆகிய இரண்டையும் அணிந்துகொண்டு, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேரில் அமர்ந்து போட்டியைப் பார்ப்பது போன்ற அதே அதிரடி உணர்வுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Arshad Muhammad (@arshadmuhammadhanif)

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் அரசியல் மற்றும் விளையாட்டு ரீதியிலான சூழ்நிலைகளுக்கு மத்தியில், பாகிஸ்தான் ரசிகர்கள் ஒரு இந்திய ஐபிஎல் அணியின் வெற்றியைத் தங்களின் சொந்த நடையில் கொண்டாடுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆர்சிபி அணியின் இந்த உலகளாவிய புகழுக்கும், எல்லைகளைத் தாண்டிய ரசிகர் பட்டாளத்திற்கும் அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தான் முக்கியக் காரணம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி கோப்பையைக் கைப்பற்றியதை அடுத்து, இந்தியாவின் பல நகரங்களில் ரசிகர்கள் வீதிகளில் இறங்கித் திருவிழா போலக் கொண்டாடிய நிலையில், அமீரகத்தில் அரங்கேறிய இந்த பாகிஸ்தான் ரசிகர்களின் சுவாரஸ்யமான கொண்டாட்டச் செய்தி தற்பொழுது சோசியல் மீடியாவில் சிம்பிளாக செம வைரலாகி வருகிறது.