டெல்லியில் வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்,  டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பாஜக மூத்த தலைவர் எச் ராஜா மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தலைநகர் டெல்லியில் சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் பாஜக பெரும்பான்மையோடு அங்கு ஆட்சி அமைக்கும் சூழல் தற்போது உள்ளது. கடந்த 12 வருடங்களாக ஆம் ஆத்மி கட்சியினர் செய்துள்ள ஊழல், அசுத்தமாக மற்றும் பராமரிக்கப்படாத நகரம், மோசமான ஆட்சி என அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதனால் கட்டாயம் இந்த முறை பாஜக அரசின் சாதனைக்கு டெல்லியில் நல்ல பலன் அளிக்கும் சூழல் நிலவி வருகிறது என எச் ராஜா தெரிவித்துள்ளார்.