மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே 27 வயது இளைஞர் ஒருவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் “Everyone Sorry” எனப் பதிவிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவின் கட்கி பகுதியைச் சேர்ந்த அமர் ராஜேந்திர கடம் என்ற அந்த இளைஞர், கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போயிருந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜ்கட் பகுதியில் உள்ள வரஸ்காவ் அணையின் பின்புறம் அவரது மொபைல் போன், துணிகள் மற்றும் அடையாள அட்டை ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இதனால் அதிர்ச்சியடைந்த மீட்புக் குழுவினர் ஆழமான அந்தப் பகுதியில் தீவிரமாகத் தேடியபோது, அமரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்த பின்னரே அவர் அந்த உருக்கமான ஸ்டேட்டஸை வைத்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனால், நன்கு படித்து வேலையில் இருந்த அந்த இளைஞர் எதற்காக இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

தற்கொலைக்கு முன்பாக அவர் பதிவிட்ட அந்த ஒற்றை வாசகம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.