மும்பையில் ரயிலில் பயணம் செய்தபோது தனது உடமைகள் மற்றும் மொபைல் போன் திருடுபோனதால், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, நடைபாதையில் பிச்சை எடுத்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவரை மும்பை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் (Nanded) மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான அபய் என்ற வாலிபர், ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் ரயிலில் மும்பை வந்தபோது, அவரது பணம், சான்றிதழ்கள், மொபைல் போன் மற்றும் குடும்பத்தினரின் எண்கள் எழுதப்பட்டிருந்த டைரி அடங்கிய பை முற்றிலும் திருடுபோனது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குடும்பத்தைத் தொடர்பு கொள்ள முடியாமல் மும்பையிலேயே தவித்துப்போனார். ஏற்கனவே லேசான மனநலப் பிரச்சனை இருந்ததால், இந்தத் துயரத்தால் அவரது மனநிலை மேலும் மோசமடைந்து, வேறு வழியின்றி மாலாடு (Malad) பகுதியில் உள்ள நடைபாதையில் பிச்சைக்காரர்களுடன் தங்கி பிச்சை எடுக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில், மாலாடு பகுதியில் பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் கோமல்சிங் ஜாதவ், மிகவும் பரிதாபகரமான நிலையில் இருந்த இந்த 20 வயது வாலிபரைக் கண்டு மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு அவருக்குப் போலீசார் மொட்டையடித்து, குளிப்பாட்டி, நல்ல ஆடைகள் மற்றும் உணவு வழங்கி உபசரித்தனர். அதன் பிறகு, சப்-இன்ஸ்பெக்டர் மனிஷா காகல்கர் அவரிடம் கனிவாகப் பேசி விவரங்களைக் கேட்டறிந்தபோதுதான், அவர் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் என்பதும், பை திருடுபோனதால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதும் தெரியவந்தது.
உடனடியாக அவரது சொந்த ஊர் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, அந்த மாணவர் காணாமல் போனதாக ஏற்கனவே அவரது பெற்றோர் புகார் அளித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரது புகைப்படங்களை அனுப்பிப் பெற்றோர உறுதி செய்த பின், நள்ளிரவில் மும்பை விரைந்து வந்த பெற்றோரிடம் அந்த மாணவர் ஒப்படைக்கப்பட்டார்.
காவல் நிலையத்தில் பல மாதங்களுக்குப் பின் தனது மகனைக் கண்ட பெற்றோர் கண்ணீர் மல்க அழுதது அங்கிருந்தோரை நெகிழ வைத்ததுடன், மும்பை போலீசாரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
