கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே, வயக்காட்டில் உள்ள கொட்டகையில் கள்ளநோட்டுகள் அச்சடித்து வந்த கும்பலை போலீசார் முற்றுகையிட்ட போது, அவர்கள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநத்தம் அருகே அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(39) என்பவர், விசிக கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்தார். இவர் தனது சொந்த விளைநிலத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையில் லேப்டாப், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களை வைத்து கள்ளநோட்டு அச்சடித்து வந்ததாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த கும்பல் தப்பிச் சென்றது.

பின்னர் நடைபெற்ற சோதனையில், ரூ.500 மதிப்புள்ள 83,000 ரூபாய் கள்ளநோட்டுகள், அச்சடிக்கும் இயந்திரங்கள், லேப்டாப், பிரிண்டர், ஏர் கண், ஏர் பிஸ்டல், வாக்கி டாக்கி உள்ளிட்டவை மற்றும் கள்ளநோட்டுக்கு பயன்படும் பேப்பர் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையே, செல்வத்தின் செயல் கட்சி மரியாதைக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, விசிக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிடமணி, அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.