உத்திரபிரதேசத்தில் பகுஜன் கட்சி எம்.எல்.ஏ ராஜூபால் கடந்த 2005 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மாபியா கும்பலை சேர்ந்த அதிக்யு  அகமது கைது செய்யப்பட்டு குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜூபால் கொலை வழக்கில் முக்கிய சாட்சி உமேஷ் பால் வழக்கில் முக்கிய சாட்சி என்ற காரணத்தினால் உமேஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தது. இதனால் உமேஷுக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாவலர்களாக அரசு நியமனம் செய்திருந்தது. இந்நிலையில் பிரக்யராஜ் நகரில் தனது வீட்டிற்கு அருகே உமேஷ் நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய போது அங்கு வந்த மர்மகும்பல் அவரது கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி உள்ளது.

இதனையடுத்து காரில் இருந்து கீழே இறங்கிய உமேஷ் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷின் பாதுகாவலர்கள் பதில்தாக்குதல் நடத்த முயற்சி செய்தபோது பாதுகாவலர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த மூன்று பேரும் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் படுகாயம் அடைந்த உமேஷ் பால் மற்றும் அவரது பாதுகாவலர் சந்தீப் நிஷத் ஆகிய இரண்டு பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். மேலும் உமேஷின் மற்றொரு பாதுகாவலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.