
சீனாவின் செங்க்டூ (Chengdu) நகரில் உள்ள Luban Decoration Group என்ற நிறுவனம், நீர் இல்லாமல் காலியாக இருந்த ஒரு பழைய நீச்சல் குளத்தை தற்காலிக அலுவலகமாக மாற்றியுள்ளது. இது தொடர்பான வீடியோவை அந்த நிறுவன ஊழியர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர, அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “Swimming Area”, “Deep Water 1.55m” என்ற அடையாளங்கள் நீச்சல் குளத்தில் தெரிய வந்ததோடு, குளத்தின் உள்ளமைப்பை மாற்றாமல், அதில் மேசை, நாற்காலிகள், சாக்கெட்டுகள் மற்றும் எக்ஸ்டென்ஷன் வயர்களுடன் ஒரு முழுமையான அலுவலகம் போன்று அமைத்துள்ள காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த அலுவலகம் கடந்த 2 மாதங்களாக இயங்கி வருகிறது. ஊழியர்கள் குளத்தின் ஏறுபாதையை (ladder) பயன்படுத்தி தங்கள் பணியிடங்களுக்குச் செல்வதாக தெரிகிறது. மொத்தமாக 5 வரிசைகளாக மேசைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வரிசையிலும் 8 பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அலுவலக அமைப்பு ஒரு விஞ்ஞான புனைகதைப் படத்திலுள்ள காட்சியைப்போல் இருக்கிறது என சில ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். “குளத்தில் அமைந்த பணிமனை, ஒவ்வொரு பணியிடத்தையும் தண்ணீர் நிழலுடன் ஒரு டைவிங் டாங்க் போல காட்டுகிறது” என ஒருவர் கூறினார்.
இந்நிலையில், இது குறித்து சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகள் உருவாகியுள்ளன. சிலர் இதைப் புதுமையான முயற்சி என பாராட்டினாலும், மற்றவர்கள் தீயணைப்பு பாதுகாப்பு வசதிகள் பற்றிய கவலையைத் தெரிவித்துள்ளனர். “தள்ளுபடி வாடகைக்கு இந்த இடம் கிடைத்ததால்தான் இது நடந்திருக்கலாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்” என ஒரு வழக்கறிஞர் கூறினார். மேலும் இதுபோன்ற முறையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளாலும், அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாகவே இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.