
ஒடிசாவில் உள்ள நியாலி பகுதியில் சுகந்தா சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 6 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவரது மனைவியின் நினைவு தினத்திற்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தரகர் மூலம் ஒருவருக்கு தனது இளைய மகனான ஒன்றரை வயது குழந்தையை 5,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால் பயந்து போன மற்ற குழந்தைகள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள அப்பகுதியில் பிச்சை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். உடனடியாக குழந்தை மீட்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சுகந்தா சிங்கர் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததும், அதனால் குழந்தையை விற்றதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.