அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை கொலை செய்வதற்காக இணையத்தில் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வலைதளத்தில் கொலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்பதை பார்த்துவிட்டு அதில் தன் மகனை கொலை செய்ய கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அந்த வலைத்தளம் குற்றவாளிகளை தன்வசம் இழுக்க போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அந்த வலைதளத்தின் உரிமையாளர் தகவல்களை பெற்றுக்கொண்டு காவல்துறையினரிடம் அதனை கூறி விடுவது வழக்கம்.

இதை அறியாத அந்த பெண் இந்த வாரத்தின் இறுதிக்குள் தனது மகனை கொலை செய்ய வேண்டும் என்றும் குழந்தை இருக்கும் இடம் பற்றிய தகவலையும் அந்த வலைதளத்தில் சமர்ப்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் பயன்படுத்திய கணினியின் ஐபி முகவரி மூலம் அவரது அடையாளத்தை தெரிந்து கொண்ட காவல்துறையினர் புலனாய்வாளர் ஒருவரை வைத்து அந்த பெண்ணிடம் பேசியுள்ளனர்.

அதன்படி குழந்தையை கொல்ல 2,40,000 ரூபாய் பேரம் பேச அந்த பெண்ணும் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் தனது மகனை கொலை செய்ய முயற்சிப்பது உண்மைதான் என்பதை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சென்று அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு குழந்தையிடமிருந்து அவர் விலகியே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.