ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் மிரள வைத்து வரும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் பகிர்ந்துள்ள கருத்துக்கள் வைரலாகி வருகின்றன.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெல்லி கேபிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே ஜேமிசனின் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இது குறித்துப் பேசிய ஜேமிசன், “எனது வாழ்க்கையில் ஒரு 15 வயது சிறுவனைப் பார்த்து இந்த அளவிற்கு நான் பயந்ததில்லை. ராஜஸ்தான் அணியின் டாப் 2 வீரர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கேற்ப திட்டமிட்டு ஒருவரை ஸ்டார்க்கும், மற்றொருவரை அதாவது வைபவை எனது யார்ஜர் மூலம் நானும் ஆட்டமிழக்கச் செய்தோம்” எனத் தெரிவித்தார்.

டெல்லி அணியில் மிட்செல் ஸ்டார்க் இணைந்தது குறித்துப் பேசிய ஜேமிசன், “அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் அணியில் இருப்பது எங்களுக்குப் பெரிய பலம். சரியான நேரத்தில் அவர் அணிக்குள் வந்துள்ளார். அவருடன் இணைந்து புதிய பந்தில் பந்துவீசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 2 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், ஜேமிசன் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதோடு, இளம் வீரர் வைபவ்வை கிண்டல் செய்யும் வகையில் சைகை காட்டினார். ஒரு சிறுவனை நோக்கி இத்தகைய அநாகரீகமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பிசிசிஐ (BCCI) ஜேமிசனை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், அவருக்கு அபராதமும் விதித்து அதிரடி காட்டியுள்ளது.

மேலும் விக்கெட்டை வீழ்த்தினாலும், ஜேமிசனின் பந்துவீச்சு இந்த சீசனில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆர்சிபி-க்கு எதிராக 42 ரன்களையும், ராஜஸ்தானுக்கு எதிராக 48 ரன்களையும் வாரி வழங்கி ரன் மெஷினாக ஜேமிசன் மாறி வருவது டெல்லி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது