கேரளாவிலிருந்து வாரணாசி நோக்கி முதல் முறையாக ரயில் பயணம் மேற்கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கு, அந்த அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக மாறியது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் கூட அமர முடியாமல், கூட்ட நெரிசலால் அவதிப்பட்ட அந்தப் பெண், தன் கஷ்டத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பெண், ரயில் காவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் பலமுறை புகார் தெரிவித்திருந்தாலும், எவரும் உதவி செய்யாததாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரயில் பயணத்தின் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Neha (@nehaaaa_8_)

பயணத்தின் தொடக்கத்தில் மகிழ்ச்சியுடன் இருந்த அவர், ரயில் வட மாநிலங்களுக்குள் நுழைந்ததும் நிலைமை மாறியதாக கூறினார். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பலர் அனுமதியின்றி ஏறி, தன்னுடைய இருக்கையையும் ஆக்கிரமித்ததாக அவர் கூறினார். இரண்டு நாள் பயணத்திற்காக முன்பதிவு செய்த தனது இருக்கையில் படுத்திருந்தபோது கூட, சிலர் வலுக்கட்டாயமாக அருகில் அமர்ந்ததாக அவர் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.

மற்றொரு வீடியோவில், நள்ளிரவில் தனது இருக்கையில் தூங்க முயன்றபோது, அருகில் ஒரு ஆண் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். “அவர் எனக்கு அருகில் சாய்ந்து தூங்க முயன்றார்; நான் கத்தியதும் அவர் அங்கிருந்து எழுந்தார்,” என அந்தப் பெண் கூறினார்.

தொடர்ச்சியான புகார்களின் பின்னர், இறுதியாக தனது இருக்கையை மேல் தட்டுக்கு மாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும், முழுப் பயணமும் தன்னை அச்சுறுத்தியதாக அவர் பதிவிட்டார்.

அந்தப் பதிவில் அவர் கூறியதாவது: வடக்கிற்கு பயணம் செய்யும் போது எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். நான் இதை சமாளிக்க முடியும், ஆனால் எதுவும் மாறப்போவதில்லை என்பது வேதனை தருகிறது,” என அவர் எழுதியுள்ளார்.

மேலும், “எல்லா ஆண்களும் கெட்ட நோக்கத்துடன் இருப்பார்கள் என்று நான் கூறவில்லை; ஆனால் சிலர் தங்கள் உடல் மொழி மற்றும் நடத்தை மூலம் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றனர். நான் பணம் கொடுத்து முன்பதிவு செய்த இருக்கையில் சாந்தமாக அமர்வதற்கான உரிமை எனக்கு உண்டு,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அந்தப் பெண்ணின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, ரயில் பயணத்தின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.