திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் மகன் சஞ்செய், மேட்டுபாளையத்தைச் சேர்ந்த சுதாகரின் மகள் கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார்.

இந்தக் காதல் விவகாரம் தெரிய வந்ததும், சுதாகர், தனது மகளின் காதலை கைவிடச் சொல்லி சஞ்செயை எச்சரித்துள்ளார். ஆனால் சஞ்செய் காதலை தொடர்ந்து வந்ததை தொடர்ந்து, அதனால் கடும் கோபம் அடைந்த சுதாகர், நேற்று கார்த்திக்கான பழிவாங்கும் நோக்கில் உதயேந்திரத்திற்கு வந்து, அவரை காணாத நிலையில், அவரது தந்தை கார்த்திக்கை அரிவாளால் முகம், கை, கால்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தற்போது தலைமறைவாக உள்ள சுதாகரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சுதாகர் கடந்த 2011ஆம் ஆண்டு திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளராக இருந்த கமலக்கண்ணனை கொலை செய்த வழக்கிலும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம், திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.