குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டம் பாலன்பூர் கிராமத்தில், தனது மனைவியை பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை தனது நண்பர்களிடம் ரூ.50 ஆயிரத்திற்கு கணவனே விற்ற கொடூர சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளியான கணவன் நிகேஷ் படேல் உட்பட 7 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நிகேஷ் படேலுக்கு தனது மனைவியைப் பிடிக்காததால், அவரிடமிருந்து விடுபட நினைத்துள்ளார்.

இதற்காக சஞ்சய் தாகூர், அசோக் தாகூர் மற்றும் சச்சின் தர்பார் ஆகிய தனது நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை விலைபேச சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, அந்த நண்பர்கள் மூவரும் நிகேஷிடம் ரூ.50 ஆயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபர்கள் மூவரும் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதோடு, அவரிடமிருந்த தங்க நகைகளையும் பறித்துக் கொண்டுள்ளனர். மேலும், அவர் தப்பியோடி விடாமல் இருக்க ஒரு இரும்புக் கூண்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதற்கிடையே, தன் மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க, தனது மனைவி காணாமல் போய்விட்டதாக  காவல் நிலையத்தில் நிகேஷ் நாடகமாடி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். அப்போது அவர் தனக்கு நேர்ந்த கொடூரங்களை போலீசாரிடம் கண்ணீருடன் வாக்குமூலமாக அளித்தார். இதையடுத்து, தன் சொந்தத் திட்டத்திலேயே சிக்கிய கணவன் நிகேஷ் படேல் மற்றும் இந்த அக்குரூர குற்றத்தில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.