இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங், அவ்வப்போது முன்னாள் கேப்டன்கள் தோனி மற்றும் கபில்தேவ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். தோனி தான் தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தார் என்றும், கபில்தேவ் மீது சில தனிப்பட்ட விமர்சனங்களையும் அவர் கூறி வந்தார்.
இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது யுவராஜ் சிங் இது குறித்து முதன்முதலாக மனம் திறந்துள்ளார்.தனது தந்தை கூறிய கருத்துகளுக்காக தோனி மற்றும் கபில்தேவிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
“கபில்தேவ் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; அதேபோல் தோனியுடன் இணைந்து நான் பல போட்டிகளில் விளையாடியுள்ளேன், அந்த விமர்சனங்கள் என்னுடைய கருத்துக்கள் அல்ல என்பது அவர்களுக்குத் தெரியும்” என்று யுவராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தந்தையின் பேச்சால் ஏற்பட்ட கசப்பான உணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யுவராஜ் சிங் பேசியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
