திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஒரு பகுதியில் ரோபேட் என்ற சோமசுந்தரம் (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக சுபலட்சுமி (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 8 மாத காலமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதில் சுபலட்சுமியின் அண்ணன் சிவனேசன் (28). இவர் தன் தங்கையுடன் சேர்ந்து வாழாததால் அவருடைய கணவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு உறவுக்கார பெண் ஒருவர் இறந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் அதற்கான சுவரொட்டிகளை சோமசுந்தரம் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிவனேசன் சோமசுந்தரத்துடன் தகராறு செய்த நிலையில் அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் அதிகாலை சோமசுந்தரம் ரத்த வெள்ளத்தில் வடபாதிமங்கலம் பகுதியில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களால் சோமசுந்தரத்தை கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் சிவனேசனை கைது செய்த காவல்துறையினர் மற்றவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.