உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், ஃபதேபூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் விஜய், தலையில் நான்கு அங்குல நீளமுள்ள ஒரு இரும்பு ஆணியை தானாகவே அடித்திருப்பது பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 17-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. உடனடியாக ஹாலட் மருத்துவமனையின் நரம்பியல் துறையில் அனுமதிக்கப்பட்ட இவரது உயிர், விரைவாக நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் காப்பற்றப்பட்டது. அவரது தலையில் இருந்த ஆணி, தோல், எலும்பு, மூளை பாதுகாப்பு அடுக்குகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை துளைத்திருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்கு பிறகு சுயநினைவு திரும்பிய விஜய், தனது செயலைக் காரணப்படுத்தும் வகையில், “என் காதில் யாரோ ஒருவர் தொடர்ந்து பேசி, ஆணியை அடிக்க சொன்னார்கள். நான் தவிர்க்க முயன்றேன். ஆனால் குரல் மிகுந்த சத்தமாகக் கேட்டதால், என்னால் தவிர்க்க முடியாமல் இதைச் செய்தேன்” என கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகள் மருத்துவர்களை மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஹாலுசினேஷன் (கற்பனை குரல்) என நிபுணர்கள் விளக்குகின்றனர்.
மனநல நிபுணர் டாக்டர் தனஞ்சய் சவுத்ரி கூறுகையில், “இத்தகைய நரம்பியல் மனநோய்கள் பெரும்பாலும் அதிகப்படியான போதைப்பொருள் பயன்பாடு, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. அவர்கள் உண்மையும் கற்பனையும் வேறுபடுத்த முடியாமல் குழப்பமடைகிறார்கள். காதுகளில் குரல் கேட்டது போன்ற (விழிப்புணர்வு மாயை) ஏற்படுகிறது” என தெரிவித்தார். விஜய், டெல்லியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சமீபத்தில் தான் தனது சொந்த ஊரான ஃபதேபூருக்கு திரும்பியுள்ளார்.
தலையில் ஆணி அடித்த விஷயத்த விஜய் முதலில் யாரிடமும் கூறவில்லை. சில நாட்களில் வலிப்பு நோய் வரத் தொடங்கியதும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது தான் முழுமையான உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சோதனைகளில் ஆணி இருப்பது உறுதியாக, உடனடியாக அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது விஜய் நிலைமை மேம்பட்டு வருவதால், தொடர்ந்து மனநல ஆலோசனையும், மருத்துவ கண்காணிப்பும் அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மனநோய் விழிப்புணர்வை மேலும் வலியுறுத்தும் வகையில் உள்ளது.
