திருச்செந்தூர் அருகே குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (38) என்பவர் வெல்டிங் மற்றும் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அவரது மனைவி பார்வதி (33). இவர்களுக்கு 3 வயதில் ஆதிரா என்ற மகள் இருந்துள்ளார். இவர்களின் மூன்றாம் வகுப்பு படிக்கும் மூத்த மகன் ஸ்ரீதேவ் கோடைக்கால விடுமுறையையொட்டி தாத்தா பாட்டி வீட்டில் தங்கியிருந்தான்.

நேற்று  மாலை, வீட்டில் இருந்து அழுகுரல் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ஆதிரா சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததைத் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

தகவலறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, தாய் பார்வதியிடம் விசாரணை நடத்தினர்.

அவர் தனது வாக்குமூலத்தில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் தாலி சங்கிலியை கேட்டு, குழந்தையின் கழுத்தை நெரித்ததாகவும், தாலியை தரும் வரை பயமுறுத்தி தப்பியோடிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும், மர்ம நபர் தாலி சங்கிலியை வீட்டில் போட்டுவிட்டுச் சென்றதாகவும் கூறினார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து, சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இருப்பினும், பார்வதி அளித்த தகவல்களில் தெளிவுத்தன்மை இல்லாததையும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருப்பதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையின் போது, பார்வதி கடந்த ஆண்டு மனநல பாதிப்பால் சிகிச்சை பெற்றிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, போலீசார் பார்வதியை கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். இது நகைக்காக நடந்த கொலைதான் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது என்றும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை கொண்டு உண்மையை உறுதி செய்யும் பணியில் தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.