அபுதாபியில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம், சோசியல் மீடியாவைப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை பாடம்! நீண்ட நாள் பழகிய தோழி, அதுவும் முன்னாள் சக ஊழியர், தான் செய்த போன் காலை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பெண் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், வாட்ஸ்அப்பில் அடுக்கடுக்கான கெட்ட வார்த்தைகளில் வாய்ஸ் நோட்களை அனுப்பித் தீர்த்துள்ளார்.
“நாங்க ரொம்ப வருஷ பிரண்ட்ஸ், என்னை மதிக்காம தவிர்த்ததால சாதாரணமாகத்தான் திட்டினேன், அவமானப்படுத்துற நோக்கம் இல்லை” என அந்தப் பெண் நீதிமன்றத்தில் எவ்வளவோ கெஞ்சியும், அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் அதை தூக்கி எறிந்துள்ளது. நண்பர்களாகவே இருந்தாலும், டிஜிட்டல் தளங்களில் ஒருவருடைய கண்ணியத்தைக் கெடுக்கும் வகையில் பேசுவது அமீரகத்தின் கடுமையான சைபர் கிரைம் சட்டப்படி மன்னிக்க முடியாத குற்றம் என நீதிமன்றம் ஆணித்தரமாக விளக்கியுள்ளது.
இதன் விளைவாக, அந்தப் பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் (30,000 ஏஇடி) அதிரடி அபராதமும், பாதிக்கப்பட்ட தோழிக்கு இடைக்கால இழப்பீடாக சுமார் 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் (21,000 ஏஇடி) வழங்கவும் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘சும்மா கோபத்துல தானே பேசினேன்’ என்று அசால்ட்டாக நினைத்து வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்பிய பெண்ணுக்கு, இப்போது மொத்தமாக கிட்டத்தட்ட 13 லட்சம் ரூபாய் அபராதம் விழுந்திருப்பது வளைகுடா நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
