கர்நாடக மாநிலம் தொட்டபள்ளாபுரா அருகே லட்சுமணா(50) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ராதாம்மா(45). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். மூத்த மகன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். ராதாம்மா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். லட்சுமணா கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான லட்சுமணா தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டபோது லட்சுமணா தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அவரது தலையை சுவரில் முட்டியதால் படுகாயம் அடைந்த ராதாம்மா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதனால் பதறிப் போன லட்சுமணா கால் தவறி கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு தனது மனைவி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். அவரது இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளும் நடந்தது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமணாவை பிடித்து விசாரித்த போது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தலையை சுவரில் முட்டி கொலை செய்ததை லட்சுமணா ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ராதாம்மாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.