விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் ஆகாஷ் சிறுமியின் பெயரை பச்சை குத்தி கொண்டு அவரது வீட்டிற்கு சென்று பிரச்சனை செய்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் ஆகாஷை கண்டித்தனர். நேற்று முன்தினம் ஆகாஷ் சிறுமி பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார்.

இதனை பார்த்த சிறுமி தலைமை ஆசிரியர் உதவியுடன் தனது தாய் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டு இருந்த ஆகாஷிடம் ஏன் இங்கு நிற்கிறாய்? எனக் கேட்டனர். உடனே ஆகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சிறுமியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆகாஷை கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆகாஷை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.