சமூக வலைதளங்களில் லைக்ஸும், வியூஸும், ஃபாலோவர்ஸ்களையும் அள்ளிவிட வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனம் எந்த அளவுக்கு விபரீதமானது என்பதற்கு மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அப்பட்டமான சாட்சியாகியுள்ளது.

வாஷிம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், இணையத்தில் பிரபலமான ஹீரோவாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில், தனது உயிரைப் பற்றிய கவலை துளியும் இல்லாமல் பரபரப்பான ரயில் தண்டவாளத்தின் நடுவே சென்று ஒரு ஆபத்தான ரீலை பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், அந்த இளைஞர் ரயில் பாதையின் மையப்பகுதியில் கம்பீரமாக நின்று கொண்டு மிரட்டல் போல ஒரு வசனம் பேசுகிறார். “வாஷிம் மாவட்டத்துப் பொண்கள் என்னை ஃபாலோ பண்ற வரைக்கும் நான் இந்த தண்டவாளத்தை விட்டு நகரவே மாட்டேன்!” என்று சவால் விடும் அவர், இதற்காக வாஷிம் பெண்களின் மீதே சத்தியமும் செய்கிறார். சமூக வலைதளப் புகழுக்காகவும், சில நூறு ஃபாலோவர்ஸ்களுக்காகவும் ஒரு மனிதன் எந்த அளவுக்கு முட்டாள்தனமாக இறங்குவான் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

இந்த விபரீத ஸ்டண்ட் வீடியோ இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் தண்டவாளங்கள் என்பது எவ்வளவு ஆபத்தான மற்றும் முக்கியமான பாதுகாப்புப் பகுதி என்பது தெரிந்து கொண்டே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தற்கொலைக்கு சமம். திடீரென ரயில் வந்திருந்தால் அந்த இடத்திலேயே பலியான அவலம் நேர்ந்திருக்கும்.

இது வெறும் முட்டாள்தனம் மட்டுமல்ல, ரயில்வே பாதுகாப்புச் சட்டங்களின்படி நேரடியான குற்றமும் கூட. எனவே, இதுபோன்ற ஆபத்தான ரீல் கலாச்சாரத்தில் மூழ்கியிருக்கும் இளைய தலைமுறையினர் மீது ரயில்வே காவல்துறையும்  மாவட்ட நிர்வாகமும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒற்றைக் குரலாக உள்ளது.