பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் ராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் குமார் என்ற பாம்பு பிடிக்கும் தொழிலாளி, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மூன்று நாகப்பாம்புகளைப் பிடித்துள்ளார்.
அவற்றை வனப்பகுதியில் விடுவதற்காகக் கொண்டு சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பாம்பு கௌதமின் கையில் கடித்தது. தம்மைக் கடித்தது எந்தப் பாம்பு என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், கௌதம் அந்த மூன்று நாகப்பாம்புகளையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு உடனடியாக சாசாராம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
சிகிச்சைக்காக வந்த கௌதம், மருத்துவர்களிடம் நிலைமையை விளக்குவதற்காகப் பையில் இருந்த மூன்று பாம்புகளையும் வெளியே எடுத்தார். சுமார் 8 முதல் 10 அடி நீளம் கொண்ட மூன்று நாகப்பாம்புகள் சீறுவதைக் கண்ட மற்ற நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் மருத்துவமனை வளாகமே சிறிது நேரம் போர்க்களமாகக் காட்சியளித்தது. பின்னர் தகவலறிந்து வந்த வனத்துறையினர் பாம்புகளை மீட்ட நிலையில், மருத்துவர்கள் கௌதமுக்குத் தீவிர சிகிச்சை அளித்துக் காப்பாற்றினர்.
“பாம்பு கடித்தால் அதன் புகைப்படத்தைக் கொண்டு வந்தாலே போதுமானது, இதுபோன்று உயிருள்ள பாம்புகளை மருத்துவமனைக்குக் கொண்டு வருவது மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தானது” என்று மருத்துவர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினர்.
