ஒடிசா மாநிலம் குரும்பாலி கிராமத்தில், தன்னைத் தீண்டிய நச்சுப் பாம்பை சாதுரியமாகப் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பெண்ணின் துணிச்சலான செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரும்பாலி கிராமத்தைச் சேர்ந்த மணி நாயக் என்ற அந்தப் பெண், வழக்கம்போல இரவு  தனது வீட்டில் தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த நச்சுப் பாம்பு ஒன்று அவரைத் திடீரெனக் கடித்துள்ளது.

வலியால் அலறியெழுந்த மணி நாயக், பதற்றமடையாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தப் பாம்பை பத்திரமாக ஒரு பிளாஸ்டிக் டப்பாவிற்குள் அடைத்தார். பாம்பு கடித்ததால் உடல்நிலை மோசமடைவதற்குள், அந்தப் பாம்புடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவர் அவசரமாக விரைந்தார். மருத்துவமனைக்கு வந்த பெண், தம்மைக் கடித்த பாம்பு இதுதான் என்று கூறி மருத்துவக் குழுவினரிடம் அந்த டப்பாவை நீட்டியபோது, அங்கிருந்த மருத்துவர்களும், ஊழியர்களும் ஒருகணம் திகைத்துப் போயினர்.

எனினும், அந்தப் பாம்பைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது எந்த வகையான பாம்பு என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து, அதன் விஷத்தன்மைக்கு ஏற்ப ‘ஆன்டி-வெனோம்’  எனப்படும் உரிய விஷமுறிவு மருந்துகளை உடனடியாக மணி நாயக்குக்குச் செலுத்தினர். பொதுவாகப் பாம்பு கடித்தவர்கள் பதற்றத்தில் எந்தப் பாம்பு கடித்தது என்பதைச் சரியாகச் சொல்லத் தவறுவதால் சிகிச்சையில் தாமதம் ஏற்படும்; ஆனால், இப்பெண்ணின் துணிச்சலான செயலால் உரிய சிகிச்சை சரியான நேரத்தில் வழங்கப்பட்டு, தற்போது அவர் உயிராபத்தின்றி நலமாக உள்ளார் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.