குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஜித்தேஷ்குமார் காந்தி என்பவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏடிஎம் இயந்திரத்தில் 10,000 ரூபாய் எடுக்க முயன்றபோது, இயந்திரத்திலிருந்து பணம் வரவில்லை. ஆனால், அவரது வங்கி கணக்கிலிருந்து அந்தத் தொகை கழிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து அவர் வங்கி கிளை மற்றும் ரிசர்வ் வங்கியிடம் பலமுறை புகார் அளித்தும், முறையான பதில் கிடைக்கவில்லை. வங்கி நிர்வாகம் தொழில்நுட்பக் காரணங்களைக் கூறி பொறுப்பைத் தட்டிக்கழித்த நிலையில், ஜித்தேஷ்குமார் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, வங்கியின் சேவையில் குறைபாடு இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்றால் ஐந்து நாட்களுக்குள் அந்தத் தொகை வாடிக்கையாளரின் கணக்கில் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 100 ரூபாய் அபராதமாக வழங்கப்பட வேண்டும் என்பது விதி. இதனைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், சுமார் 3,288 நாட்கள் தாமதத்திற்காக 3.28 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வங்கிக்கு உத்தரவிட்டது. அத்துடன் மன உளைச்சலுக்கான நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவுகளையும் சேர்த்து வழங்க ஆணையிட்டது. இந்தத் தீர்ப்பு, வங்கி வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
