சிந்தனை வலுவாக இருந்தால் எளிய பொருட்களையும் அதிசயங்களாக மாற்ற முடியும் என்பதை ஒரு இளைஞர் நிரூபித்துக் காட்டியுள்ளார். தெருவில் கிடந்த ஒரு பழைய செங்கலை நவீன ஸ்பீக்கராக மாற்றி, அதனை ₹2000-க்கு விற்பனை செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் ‘டீலக்ஸ் பையாஜி’ (@deluxebhaiyaji) என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, ஒரு இளைஞர் சாலையில் கிடக்கும் பழைய செங்கல் ஒன்றை எடுப்பதில் தொடங்குகிறது. எதற்கும் உதவாது எனத் தூக்கி எறியப்பட்ட அந்தச் செங்கலுக்கு ஆரம்பத்தில் மதிப்பு ‘பூஜ்யம்’.
அந்தச் செங்கலை லாவகமாகச் செதுக்கி, அதன் மீது “Beat” என்று பிராண்ட் பெயரைப் பொறிக்கிறார். பின்னர், துல்லியமான துளைகளை இட்டு, அதில் ஸ்பீக்கர் கருவிகள் மற்றும் ஒயர்களைப் பொருத்துகிறார். பார்ப்பதற்கு சாதாரண செங்கல் போலத் தெரியாமல் இருக்க, அதற்குப் பளபளப்பான வர்ணம் பூசி ஒரு நவீன இசைச் சாதனம் போல மாற்றுகிறார்.
இந்தத் தனித்துவமான ஸ்பீக்கர், தில்லியின் புகழ்பெற்ற சி.பி (Connaught Place) சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. செங்கலில் இருந்து இசை வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்த பொதுமக்கள், ஆர்வத்துடன் அதன் ஒலியைக் கேட்டு ரசித்தனர். இறுதியாக, ஒரு வாடிக்கையாளர் இந்த ‘செங்கல் ஸ்பீக்கரை’ ₹2,000 கொடுத்து வாங்கியபோது பார்ப்பவர்கள் வியப்பின் எல்லைக்கே சென்றனர்.
View this post on Instagram
இந்தக் கண்டுபிடிப்பின் மொத்த உற்பத்திச் செலவு எவ்வளவு என்பது வீடியோவில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், படைப்பாற்றல் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
“இதுதான் சாமர்த்தியமான கண்டுபிடிப்பு கழிவுப் பொருளில் இருந்து கலைப் பொருளை உருவாக்கியது பாராட்டுக்குரியது” என நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போதைய ‘டிரெண்டிங்’ செய்தியாக மாறியுள்ளது.
