கேரள மாநிலத்தில் பின்பற்றப்பட்டு வரும் வகுப்பறை அமர்வு முறை தற்போது தமிழக அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, இனி மாணவர்கள் “ப” வடிவமாக வகுப்பறையில் அமர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் ‘முதல் பெஞ்ச்’, ‘கடைசி பெஞ்ச்’ என்ற பிரிவுகள் இல்லாமல், மாணவர்களின் கவனத்தையும் பங்களிப்பையும் சமமாக கொண்டு வரும் சூழல் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கியமாக, வகுப்பறையில் பெஞ்ச் ஒன்றின் பின்னொன்று அமர்த்தப்படும் முறை மாணவர்களில் உள்ள பிரிவினையை உருவாக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘முதல் பெஞ்ச்’ என்பது புத்திசாலித்தனத்தின் அடையாளமாகவும், ‘கடைசி பெஞ்ச்’ என்பது சோம்பேறித்தனத்தின் அடையாளமாகவும் கருதப்படுவது தவறான பார்வையை உருவாக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
இதைத் தவிர்க்க, மாணவர்கள் அரை வட்டம் போல் அல்லது ப/யூ வடிவத்தில் அமரும்படி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது மாணவர்களில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்கும் என்றும், ஆசிரியர்களின் கவனத்தில் பின்புற மாணவர்களும் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த முறை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையைப் பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா தனது அனுபவத்தையும் கருத்தையும் “எக்ஸ்” தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“இது மிகவும் சுவாரஸ்யமான ஒரு முயற்சி. சமபங்கு பங்களிப்பையும் கவனத்தையும் ஊக்குவிக்கும் ஒரு பரிசோதனை போல உள்ளது. ஆனால் ஒரு உண்மையை நான் ஒப்புக்கொள்கிறேன்…
பள்ளியில் எனக்கு பிடித்த இடம் கடைசி பெஞ்ச்தான்! அது எப்போதும் எனக்காக ஒதுக்கப்படவில்லை. ஆனால், என் உள்ளுணர்வு என்னை அங்கேயே அழைத்துச் சென்றது. கடைசி பெஞ்ச் இல்லாமல் போனால் அதை நிச்சயம் நான் மிஸ் பண்ணுவேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த ‘ப’ வடிவ அமர்வு முறையை சிலர் வரவேற்றாலும், இதற்கான இட வசதிகள் பல பள்ளிகளில் இல்லாததாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 40 மாணவர்களுக்கும் மேற்பட்ட வகுப்புகளில் இந்த முறையை நடைமுறைப்படுத்துவது கடினம் என்றும், பல வகுப்பறைகளில் போதுமான பரப்பளவு இல்லாததால் இது நடைமுறையில் சிரமம் தரும் எனக் கூறுகின்றனர்.
மேலும், இரண்டு புறமாக அமர்ந்திருக்கும் மாணவர்கள் போர்டைப் பார்க்க கழுத்தை திருப்பி வைத்திருக்க வேண்டியதால், நீண்ட நேரம் கழுத்து வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும் எனவும் சிலரின் கண்டனக் குரலும் எழுந்துள்ளது.
