தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு மகளிர் தின வாழ்த்துக்களுடன் சில கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

மகளிர் தின மேடையில் விஜய் தனது குடும்பப் பிரச்சினையைக் குறிப்பிட்டுப் பேசியதை விமர்சித்துள்ள அவர், “எது வொர்த் இல்லை தலைவா? உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு அரசியல் தலைவர் பேசும் வார்த்தைகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், பெண்கள் உயர்வு பற்றிப் பேசும் அதே வேளையில் சொந்த வாழ்க்கையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

விஜய்யின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குடும்ப உறவுகளைக் கேலி செய்யும் வகையிலும் பதிவிடுவதைச் சுட்டிக்காட்டிய ரஞ்சனா, இதற்குக் காரணமான தவறான முன்னுதாரணத்தைத் தலைவர் உருவாக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.

நடிகை ஒருவரைப் பொதுவெளியில் அழைத்து வருவது இளைஞர்களிடம் தவறான எண்ணத்தை விதைக்கும் என்றும், பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்மாமனாகச் சீர் கொடுப்பேன் என்று சொல்வதற்கு முன், சொந்தக் குழந்தைகளுக்குச் சிறந்த தகப்பனாக இருப்பதே முக்கியம் என்றும் அவர் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

மேலும், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காமல், அவர்களைத் தனது இடத்திற்கு வரவழைத்து ஆறுதல் கூறியது தமிழர் பண்பாடு அல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

ஒரு தலைவரின் ஒழுக்கமும் செயலும் ஒரு தலைமுறையையே உருவாக்கும் என்பதால், தமிழக இளைஞர்களுக்கு மோசமான ட்ரெண்ட் செட்டராக மாறிவிடாதீர்கள் என்று விஜய்க்கு அவர் அக்கறையுடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் எதிர்காலம் தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கத்தால் பாதிக்கப்படக்கூடாது என்பதே தனது கவலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.