பிலிப்பைன்ஸ் நாட்டின் பலாவான் தீவுக்கு அருகில் உள்ள புவேர்ட்டோ பிரின்செசா பகுதியில் கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடந்துள்ள ஒரு திகிலூட்டும் சம்பவம், இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் முகத்தில் ஆக்டோபஸ் ஒன்று எட்டு கைகளுடன் தனது மரணப் பிடியை இறுக்கியதோடு, அவரை மூச்சுமுட்டச் செய்த கோரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது ஜெஸ்ஸர் சர்வாண்டீஸ் என்ற மீனவர், மரத்தாலான சிறிய படகு ஒன்றில் வழக்கம் போல் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் வலையில் சிக்கிய ஆக்டோபஸைக் மேலே இழுத்தபோது, எதிர்பாராத விதமாக அது திடீரெனப் பாய்ந்து அவரது முகத்தில் ஒட்டிக்கொண்டது.

அந்த எட்டுக்கால உயிரினம் அவரது முகம் முழுவதையும் தனது சக்திவாய்ந்த உறிஞ்சும் பட்டைகளால் இறுகப் பற்றி மூக்கையும் வாயையும் மூடியது. இதனால் மூச்சுவிட முடியாமல் தவித்த ஜெஸ்ஸர், அதைத் தனது முகத்திலிருந்து விலக்க முயன்றார். ஆனால் அந்த ஆக்டோபஸ் சிறிதும் பிடியைத் தளர்த்தாமல் அவரது முகத்தையே இறுக்கியது.

 

View this post on Instagram

 

A post shared by Daily Mail (@dailymail)

இந்த ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, அங்கிருந்த மூங்கில் கம்பு ஒன்றை எடுத்த ஜெஸ்ஸர், அதன் பிடியை வலுக்கட்டாயமாகத் தளர்த்த அந்த ஆக்டோபஸைத் தொடர்ந்து அடித்துள்ளார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அந்த கடல் அரக்கன் பிடியைத் தளர்த்தியதும், ஒருவழியாகச் சமாளித்த ஜெஸ்ஸர் அதை மீண்டும் கடலிலேயே தூக்கி வீசினார்.

இதுகுறித்து பேசிய ஜெஸ்ஸர், “நான் பிடித்த அந்த ஆக்டோபஸ் கையாள்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது. அது கிட்டத்தட்ட என் முகத்தையே பிய்த்துவிடும் அளவுக்கு ஆபத்தாக முடிந்தது” என்று தனது பயங்கரமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஆக்டோபஸ்களின் அசாதாரண நுண்ணறிவு, சக்திவாய்ந்த உறிஞ்சும் பட்டைகள் மற்றும் நெகிழ்வான உடலமைப்பு ஆகியவை எந்தவொரு மேற்பரப்பையும் இரையையும் எவ்விதத் தயக்கமும் இன்றி இறுக்கிப் பற்றிக் கொள்ளும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.