17-வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

​கடந்த மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து, விஜய் தலைமையிலான தவெக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது உறுதியானது. முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கடந்த நிலையில், இன்று (மே 9) எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வரும் இந்த இக்கட்டான அரசியல் சூழலில், அதிமுக தலைமையிடமிருந்து வந்துள்ள இந்த வாழ்த்துச் செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.