தமிழக அரசியல் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) பல்வேறு பதவிகளைக் கோருவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசிக சார்பில் அமைச்சரவையில் இடமோ அல்லது குறிப்பிட்ட பதவிகளோ கேட்கப்படுவதாக வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசிக-வின் கண்ணியத்தைச் சிதைக்கும் வகையிலும், கட்சியைக் சிறுமைப்படுத்தும் வகையிலும் இத்தகைய திட்டமிட்ட வதந்திகள் பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். “இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்; விசிக-வைச் சிறுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு யாரும் துணை போக வேண்டாம்” என்றும் ரவிக்குமார் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார். விசிக-வின் அரசியல் நகர்வுகள் குறித்துத் தலைவர் திருமாவளவன் முறைப்படி அறிவிப்பார் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
