தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுக, தற்போது தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், கட்சி இரண்டாக உடையும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான பலத்தைப் பெற முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கியத் தலைவர்களான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தலைமையில் சுமார் 37 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ரகசியமாக ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதுடன், தவெக-வுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1987 மற்றும் 2017-ல் அதிமுக சந்தித்த பிளவுகளைப் போலவே, தற்போதும் ஒரு வரலாற்றுச் சரிவை நோக்கி அக்கட்சி நகர்ந்து கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்பிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலத்தை (35 எம்.எல்.ஏ-க்கள்) விட அதிகமாக, அதாவது 37 பேர் தற்போது தனி அணியாகத் திரண்டுள்ளதால், இவர்களே “உண்மையான அதிமுக” என்று அங்கீகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
இந்த 37 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களும் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட்டுவிட்ட விஜய்க்கு, இப்போது அதிமுகவின் இந்த மெகா ஆதரவும் கிடைத்தால், சட்டசபையில் அவரது பலம் அசுர வேகத்தில் உயரும்.
ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டித் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், மறுபுறம் எம்.எல்.ஏ-க்கள் கலகம் செய்து வெளியேறுவது அதிமுக கூடாரத்தையே நிலைகுலையச் செய்துள்ளது. தமிழக அரசியலில் அடுத்த சில மணி நேரங்கள் திக் திக் நிமிடங்களாக மாறப்போவது உறுதி!
