தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டமன்ற’ சூழல் நிலவி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய் புதிய ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருப்பது திமுக முகாமை அடியோடு நிலைகுலைய வைத்துள்ளது.

காமராஜர் ஆட்சி, சமூக நீதி மற்றும் இந்திய அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் காங்கிரஸ் அறிவித்துள்ள நிலையில், இதற்கு மிகவும் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ள திமுக, “எங்கள் தோளில் சவாரி செய்து ஐந்து இடங்களை வென்றுவிட்டு, இப்போது எங்களின் முதுகிலேயே குத்திவிட்டீர்கள்; திராவிட இயக்கத்தால் உங்களுக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சீட்டை இனி எந்த முகத்தோடு வைத்துக்கொண்டிருப்பீர்கள், அதை முதலில் ராஜினாமா செய்வீர்களா?” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், “தயவுசெய்து மீண்டும் எங்களிடம் வந்துவிடாதீர்கள்” எனத் திமுக செய்தித் தொடர்பாளர்கள் மிகக் காட்டமாகச் சாடியுள்ளதுடன், காங்கிரஸை ‘ஒட்டுண்ணிகள்’ என்றும் ‘முதுகில் குத்துபவர்கள்’ என்றும் வர்ணித்துள்ளனர். பன்னெடுங்காலமாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி இந்த அளவுக்கு அசிங்கமாக உடைந்திருப்பதுடன், புதிய அரசியல் அலைக்குக் காங்கிரஸ் கைகொடுத்துள்ளது தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய பிளவையும் திக் திக் நிமிடங்களையும் ஏற்படுத்தியுள்ளது.