ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு பேரிடி விழுந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில், மும்பை அணி வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது.

ரையன் ரிகல்டனின் 123 ரன்கள் (55 பந்துகள்) என்ற அசுரத்தனமான சதத்தின் உதவியுடன் மும்பை அணி 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென் ஆகியோரின் காட்டடி ஆட்டத்தால், வெறும் 18.4 ஓவர்களில் அந்த இலக்கு தகர்க்கப்பட்டது.

இந்த படுதோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, “244 ரன்களைப் பாதுகாப்பதில் பந்துவீச்சாளர்களை நம்பினேன், ஆனால் திட்டங்களைச் செயல்படுத்துவதில் கோட்டை விட்டுவிட்டோம்” என வேதனையுடன் தெரிவித்தார். இந்த தோல்வியின் மூலம் மும்பை அணியின் பிளேஆஃப் கனவு கிட்டத்தட்ட கலைந்துவிட்டது என்பதை ஹர்திக் பாண்டியா மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

MI அணி தனது தனித்துவமான அடையாளத்தை இந்த சீசனில் வெளிப்படுத்தத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட ஹர்திக், “வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் பாதிக்கும்” என எமோஷனலாகப் பேசினார்.

அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் மும்பை பந்துவீச்சாளர்கள் திக்குமுக்காடிய நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் SRH அபார வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்திற்குச் சென்ற மும்பை அணி, இனி மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.