இந்திய தகவல் தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான இன்போசிஸ், அதன் ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் 5 நாட்கள், தினசரி 9 மணி நேரம் 15 நிமிடங்கள் வேலை செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவை அறிவித்துள்ளது.

இத்தகவல் ஊழியர்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அலுவலகத்தில் பணிபுரிபவர்களோடு, வீடுகளிலிருந்து தொலைதூர வேலைசெய்வோருக்கும் இது கட்டாயமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவன நிறுவனர் நாராயணமூர்த்தி, சமீபத்தில் ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இதற்கு சமூக வலைதளங்களில் பலவிதமான எதிர்வினைகள் கிளம்பின. சிலர் அவரின் கருத்துக்கு ஆதரவாக இருந்தாலும், பலர் இது வேலை-தனிமனித வாழ்வுக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலைமையில், இன்போசிஸ் நிறுவனம் தற்போது தினசரி வேலை நேரத்தை 9.15 மணி நேரமாக நிர்ணயித்துள்ளது. இதை மனித வள மேம்பாட்டு துறை மின்னஞ்சல் மூலம் அறிவித்து, ஒவ்வொரு ஊழியருடைய பணி நேர விவரங்களை கண்காணித்து, மாத இறுதியில் தகவல் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. புதிய உத்தரவு தொழில்நுட்ப துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.