சென்னையை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் என்.ஆனந்த், தங்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், எக்காரணத்தைக் கொண்டும் ஊழல் செய்ய மாட்டோம் என்றும் தெளிவாகத் தெரிவித்தார்.
தவறி ஊழல் செய்தால், அடுத்த விநாடியே தங்களின் பதவி பறிக்கப்படும் என்றும், முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்களுக்குச் சேவை செய்வது மட்டுமே தங்களின் நோக்கம் என்றும் அவர் பேசினார்.
மேலும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தற்போது த.வெ.க.வில் இணைந்து வருவதாக அவர் கூறினார். மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கும் கட்சியில் உரிய மரியாதை கொடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், பொதுமக்கள் தங்கள் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளைத் தெரிவித்தால் அமைச்சர்கள் உடனடியாக அதைத் தீர்த்து வைப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, வரவிருக்கும் உள்ளாட்சிப் (பஞ்சாயத்து) தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
