அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ரகசியங்கள் ஊடகங்களுக்குக் கசிந்ததைத் தொடர்ந்து, பென்டகன் நிர்வாகம் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகள் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது ஈரானுடனான தொடர் போரின் காரணமாக, அமெரிக்க ராணுவத்திடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் ஆயுதக் கையிருப்பு கணிசமாகக் குறைந்து வருவதாகவும், ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளியாயின. தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்த ரகசியத் தகவல்கள் பத்திரிகையாளர்களுக்கு எப்படி கசிந்தது என்பது குறித்து அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தீவிர விசாரணையைத் தொடங்கியது.
ரகசியத் தகவல்களை வெளியில் கசியவிட்டது யார் என்பதைக் கண்டறியும் பொருட்டு, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பென்டகனில் பணியாற்றும் சுமார் 50 உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவ வரலாற்றில் உயர் மட்ட அதிகாரிகளுக்கு இவ்வளவு பெரிய அளவில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதுதவிர, ராணுவ செய்தித்தாளின் முதன்மை ஆசிரியர் உட்பட மூன்று மூத்த பத்திரிகையாளர்கள் பென்டகன் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் ஆயுதப் பற்றாக்குறை இருப்பதாக வெளியான செய்திக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். “அமெரிக்கா எளிதில் வெல்லக்கூடிய போரில் நாடு தோற்க வேண்டும் என விரும்பும் தேசத்துரோகிகளே இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்; நம்மிடம் வரம்பற்ற ஆயுதக் கையிருப்பு உள்ளது” என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
