அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், பள்ளிப் பேருந்து ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், மாணவர்கள் காட்டிய அபாரத் துணிச்சலும், சமயோசித புத்தியும் ஒரு பெரும் விபத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளன. அதாவது லியா டெய்லர் என்ற ஓட்டுநர், புதன்கிழமை காலை மாணவர்களைப் பேருந்தில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் பேருந்தின் ஸ்டீயரிங்கிலேயே சரிந்து விழுந்தார்.

டிரைவர் மயங்கிய நிலையில், பேருந்து கட்டுப்பாடின்றிச் சாலையில் ஓடத் தொடங்கியது. பேருந்தின் முன்புறம் அமர்ந்திருந்த மாணவர் ஒருவர், நொடிப்பொழுதில் நிலைமையை உணர்ந்து ஓடிச் சென்று ஸ்டீயரிங்கைப் பிடித்துப் பேருந்தைச் சீராகச் செலுத்தினார். இடையில் ஓட்டுநர் லியா சிறிது கண் விழித்தாலும், மீண்டும் மயங்கி பின்னோக்கிச் சரிந்தார்.

பேருந்தில் பதற்றம் நிலவினாலும், மாணவர்கள் நிதானம் இழக்கவில்லை. ஒரு மாணவர் டிரைவர் சீட்டிற்குச் சென்று பிரேக்கை அழுத்திப் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தினார். மற்றொரு மாணவர் ஓட்டுநர் கையில் வைத்திருந்த ஆஸ்துமா மருந்தைத் தேடி எடுத்து அவருக்குக் கொடுத்தார். அதே சமயம் மற்ற மாணவர்கள் உடனடியாகத் தங்கள் செல்போன் மூலம் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

மாணவர்களின் இந்தத் துரித செயலால் பேருந்திலிருந்த சுமார் 12 மாணவர்கள் எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினர். மெக்கன்சி பிஞ்ச், ஜாக்சன் காஸ்னேவ் உள்ளிட்ட அந்த 5 மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் ஒரு சிறப்பு விழா எடுத்துப் பாராட்டியது. இந்த அவசரச் சூழலில் அவர்கள் செயல்பட்ட விதம் வியக்கத்தக்கது. எங்களைப் பெருமைப்பட வைத்துவிட்டார்கள் என்று பள்ளி முதல்வர் மெலிசா சாசியர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தற்போது பூரண குணமடைந்துள்ள ஓட்டுநர் லியா, “அந்த மாணவர்கள் என் உயிரைக் காப்பாற்றிய தேவதைகள்” என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். மேலும் பேருந்தின் உள்ளே இருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி, உலகெங்கிலும் உள்ள மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.