ஜடேஜா தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்..

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஆண்டு மிக மோசமான சீசனில் இருந்தது. சென்னை அணி விளையாடிய 14 போட்டிகளில் 10ல் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் சீசனை முடித்தது. கேப்டன் மாற்றம்  கடந்த முறை சிஎஸ்கேவின் ஆட்டத்தை பாதித்ததாக கூறப்பட்டது. கடந்த சீசனுக்கு முன்பே, தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார், அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜாவின் கீழ் அந்த அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன் மூலம் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜட்டு மீண்டும் தோனியிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

இந்த சூழலில் வரவுள்ள 2023 ஐபிஎல் சீசனில் ஜடேஜா மிகப்பெரிய பலமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஆஸிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் என அசத்தி வருகிறார். காயத்திலிருந்து மீண்டு வந்த அவர் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் இரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

இந்நிலையில் முன்னாள் இந்திய சூப்பர் ஸ்டார் ஹர்பஜன் சிங், ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் செயல்திறன் மற்றும் மேட்ச் வின்னிங் திறனை பாராட்டினார். இந்திய அணிக்கு பந்து வீச்சாளர் போல் பேட்டராகவும் பிரகாசிக்க முடியும் என்றார். ஜடேஜா தற்போது உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்றும், இங்கிலாந்தின் ஆல் டைம் சூப்பர் ஸ்டார் பென் ஸ்டோக்ஸை மட்டுமே ஜடேஜாவுடன் ஒப்பிட முடியும் என்றும் ஹர்பஜன் கூறினார்.

2023 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி முதல் மே 21 ஆம் தேதி வரை இந்தியாவில் 12 மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி மே 28ஆம் தேதி நடைபெறுகிறது. மார்ச் 31 ஆம் தேதி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4 முறை ஐபிஎல் சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது..