2023 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்..

தென்னாப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், குரூப் 1ல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவும், குரூப் 2ல் இருந்து இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறுகிறது.

 

நடப்பு தொடருக்கான லீக் சுற்றில் ஆஸ்திரேலியா தோற்காமல் உள்ளது. மேலும் அதே நம்பிக்கையுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. மறுபுறம், லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்து, பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நம்பிக்கையில் இந்திய அணி களம் இறங்குகிறது.இந்திய அணியைப் பொறுத்தவரை, மந்தனா பேட்டிங்கில் ஃபார்முக்கு திரும்பியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரேணுகா பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கிறார்.

இதுவரை ஒருமுறை கூட பட்டம் வெல்லாத இந்தியா, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ள முடியுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பெண்கள் டி20 போட்டியில் இந்தியா vs ஆஸ்திரேலியா :

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2022 டிசம்பரில் சூப்பர் ஓவரில் இந்தியாவுக்கு சமீபத்திய வெற்றி கிடைத்தது. முன்னதாக, 2020 டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பிப்ரவரி 2020க்குப் பிறகு இந்தியாவின் முதல் வெற்றி இதுவாகும். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 4-1 என தொடரை இழந்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா பெண்கள் டி20 :

விளையாடிய போட்டிகள் – 30

ஆஸ்திரேலியா வெற்றி – 22

இந்தியா வெற்றி – 7 (சூப்பர் ஓவரில் ஒரு வெற்றி)

டிரா – 1

பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிய ஆட்டங்கள் :

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 ஆட்டங்களில் இந்திய மகளிர் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சிட்னியில் 2020 தொடரின் குழுநிலை ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற ஒரே பெரிய வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய பூனம் யாதவ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் அரையிறுதியில் மோதுவது இது 3வது முறையாகும். 2010 மற்றும் 2018 ஆகிய இரண்டிலும் இந்தியா தோல்வியடைந்தது. இதனால், இறுதிப் போட்டியை இந்தியா இழந்தது..

இந்தியா vs ஆஸ்திரேலியா பெண்கள் டி20 உலகக் கோப்பை :

விளையாடிய போட்டிகள் – 5

ஆஸ்திரேலியா வெற்றி – 4

இந்தியா வெற்றி – 1

டிரா – 0

மெல்போர்னில் நடந்த 2020 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. சுவாரஸ்யமாக, டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாக் அவுட் போட்டியில் இந்தியா இன்னும் வெற்றி பெறவில்லை. மேலும், 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருப்பது ஆறுதலாக உள்ளது. எனவே இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்குள் நுழைய இந்திய அணி மல்லுகட்டும் என்பதில் சந்தேகமில்லை..

இந்திய மகளிர் அணி :

ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, தேவிகா வைத்யா, ராதா யாதவ், ரேணுகா தாக்கூர், அஞ்சலி சர்வானி, பூஜா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ஷிகா பாண்டே.

ஆஸ்திரேலிய மகளிர் அணி :

மெக் லானிங் (கே), அலிசா ஹீலி (து.கே), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரஹாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம்