குழந்தைப் பருவம் என்பது விளையாட்டிற்கும் படிப்பிற்குமானது. ஆனால், வறுமை சில குழந்தைகளை மிகச்சிறிய வயதிலேயே வீதிக்குக் கொண்டு வந்துவிடுகிறது. அப்படி ஒரு மனதை உருக்கும் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறுவன் காந்தி போன்ற வேடமணிந்து, உடல் முழுவதும் வெள்ளி நிற வர்ணம் பூசிக்கொண்டு, ஒரு சிலை போல அசைவின்றிச் சாலையோரம் நின்று கொண்டிருக்கிறான்.
மக்கள் அவனை ஒரு வேடிக்கைப் பொருளாகப் பார்த்துப் புகைப்படமும் வீடியோவும் எடுத்துக் கடந்து செல்கின்றனர். அவன் ஏன் அப்படிச் சிலையாக நிற்கிறான், அவனது மௌனத்திற்குப் பின்னால் இருக்கும் பசி என்ன என்பதை எவரும் உணரவில்லை. ஆனால், அங்கு வந்த ஒரு சின்னஞ்சிறு சிறுமி மட்டும், அந்தச் சிறுவனின் பசியைத் துல்லியமாக உணர்ந்து கொண்டாள்.
View this post on Instagram
அந்தச் சிறுமி மெதுவாகச் சிறுவனிடம் சென்று, தான் வைத்திருந்த உணவை அவனுக்கு ஊட்ட முயல்கிறாள். முதலில் தனது ‘சிலை’ வேடம் கலைந்துவிடுமோ என்ற பயத்தில் அந்தச் சிறுவன் அசையாமல் இருக்கிறான்.
ஆனால், அந்தச் சிறுமி விடாமல் அன்புடனும் அக்கறையுடனும் உணவை நீட்டவே, பசி தாளாத அந்தச் சிறுவன் மெதுவாகத் தனது வாயைத் திறந்து அந்த உணவை வாங்கிக் கொள்கிறான்.
“உலகமே அவனைப் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தபோது, ஒரு சிறுமி மட்டும் அவனது பசியைப் புரிந்து கொண்டாள்” என்ற வரிகளுடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, பார்ப்பவர் எவரையும் கண் கலங்கச் செய்கிறது.
மனிதாபிமானம் என்பது பேச்சில் இல்லை, சக உயிரின் வலியை உணரும் அந்தச் சிறுமியின் அன்பில்தான் இருக்கிறது என நெட்டிசன்கள் இந்த வீடியோவை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
