தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து நடைமுறைகள் குறித்த செய்திகள் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளன. இந்தச் சூழலில், நடிகை த்ரிஷா வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு சமூக வலைதளப் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“என்ன நடந்தாலும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், இந்த உலகமே உனக்கு எதிராக நின்றாலும்… நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்ற வாசகங்கள் அடங்கிய பதிவு ஒன்று த்ரிஷாவின் பெயரில் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் – சங்கீதா பிரிவுக்கு த்ரிஷா தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், இந்தப் பதிவு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல அமைந்தது.

வைரலாகும் இந்தப் பதிவு குறித்து ஆய்வு செய்ததில் சில முக்கிய உண்மைகள் தெரியவந்துள்ளன: வைரலாகும் அந்தப் பதிவு த்ரிஷா தற்போது வெளியிட்டது அல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு சூழலில் அவர் பதிவிட்டது அல்லது யாரோ எடிட் செய்தது எனக் கூறப்படுகிறது. விஜய்யின் விவாகரத்து விவகாரம் வெடித்த பிறகு, த்ரிஷாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இது போன்ற எந்தப் பதிவும் சமீபத்தில் பதிவேற்றப்படவில்லை. பழைய பதிவை தற்போது நடக்கும் சம்பவங்களோடு தொடர்புபடுத்தி, தவறான உள்நோக்கத்துடன் சிலர் பரப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் மனுவில் அதிர வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது 1999-ல் முறைப்படி திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த  2021-ம் ஆண்டு முதல் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், ஒரு நடிகையுடனான தொடர்பு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்தப் பிரிவை நாடுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிக்கும் உரிமை மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் ஆகியவற்றை சங்கீதா கோரியுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் தற்போதைய நிலையில், வைரலாகும் த்ரிஷாவின் பதிவுக்கும் விஜய்யின் விவாகரத்து விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது. இது போன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை விஜய் தரப்பிலிருந்தோ அல்லது த்ரிஷா தரப்பிலிருந்தோ இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.