ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவலின் போது கடந்த 2020 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இங்கு செல்வதற்கு முன்பு ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா 15 நாட்கள் ஹோட்டலில் தனி அறையில் இருந்தார். இவர் போட்டிக்காக சென்ற நிலையில் திடீரென சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவுக்கு பால்கனி அறை கொடுக்காதது தான் காரணம் என்று அப்போது சர்ச்சைகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஏலத்தின் போது சிஎஸ்கே அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவை வாங்காததால் அந்த சர்ச்சை உண்மை என்றே கூறப்பட்டது.

இது தொடர்பாக இதுவரை சிஎஸ்கே நிர்வாகமும் ஐபிஎல் வீரர்களும் பொதுவெளியில் பேசாத நிலையில் தற்போது அது குறித்தான உண்மையை சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் தொடர் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற போது பதான்கோட்டில் என்னுடைய உறவினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டதால் என்னுடைய தாய் தந்தை உட்பட குடும்பத்தினர் மிகுந்த கவலையில் இருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் சொந்த ஊருக்கு சென்றேன். இது சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனிக்கும் தெரியும். அந்த சீசனில் மீண்டும் கலந்து கொள்ள வேண்டும் என்றால் 30 நாட்கள் ஹோட்டல் தனி அறையில் இருக்க வேண்டும் என்பதால்தான் நான் கலந்து கொள்ளவில்லை. இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு சீசனில் அனைவரும் இணைந்து விளையாடி கோப்பையை வென்றோம். மேலும் அதன் பிறகு என்னால் சிஎஸ்கே அணியுடன் பயணிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.