சாதாரணமாக நாம் செய்யும் தினசரி பழக்கமான பல் துலக்குதல், ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் முடியும் என்பதை நம்புவது கடினம். சத்தீஸ்கரைச் சேர்ந்த ராகுல் குமார் ஜங்டே என்பவருக்கு நேர்ந்த இந்த விபரீத நிகழ்வு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல் துலக்கிக் கொண்டிருந்த போது திடீரென அவரது கழுத்துப் பகுதியில் இருந்த ரத்தக்குழாய் வெடித்ததில், ரத்தம் பீய்ச்சி அடித்து அவர் மயக்கமடைந்தார். இந்த அரிதான பாதிப்புக்கு மருத்துவ ரீதியாக ‘கரோடிட் ஆர்டரி சிதைவு’ என்று பெயர்.
இது பொதுவாக கழுத்துப் பகுதியில் ஏற்படும் கடுமையான அழுத்தம் அல்லது எதிர்பாராத திசு கிழிவினால் உண்டாகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுக்கு ராகுலின் உடலில் ஏற்கனவே இருந்த ஒரு அரிதான மரபணு குறைபாடு அல்லது ரத்தக்குழாய் சுவர்களின் பலவீனமே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். ரத்தக்குழாயின் உட்புற அடுக்கு கிழிந்து, அதன் வழியாக ரத்தம் கசியும் போது இத்தகைய வெடிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் ராகுலுக்கு சரியான நேரத்தில் விஷ்ணுகாந்த் திவாரி உள்ளிட்டோர் உதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்ததால், சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் உயிர் பிழைத்தார். பொதுவாக விபத்துகளில் மட்டுமே நிகழும் இத்தகைய ரத்தக்குழாய் வெடிப்பு, பல் துலக்கும்போது நிகழ்ந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு மிக அரிதான மற்றும் எச்சரிக்கையான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
