உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூர் மாவட்டத்தில், காதலன் கொல்லப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் ஒருவரின் தற்கொலை செய்தியால் பெரும் சோக நிலை ஏற்பட்டுள்ளது. சில்ஹானா பகுதியைச் சேர்ந்த 18 வயது அங்கிதா என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த மகிழ் (22) என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மகிழ் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அங்கிதாவின் குடும்பத்தினரே மகிழை கொன்றதாக, மகிழின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியும், போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவத்தையடுத்து, அங்கிதாவின் இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, காதலனின் மரணத்தில் மனமுடைந்த அங்கிதா, சனிக்கிழமை வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அருகில் பூச்சி மருந்து பாக்கெட் காணப்பட்டதாகவும், இது தற்கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இரட்டை மரண வழக்குகளை தொடர்புபடுத்தி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
