இந்திய ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் வகையில், சாப்பாட்டு பில் விஷயத்தில் பயணியை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடுவேன் என ஊழியர் ஒருவர் மிரட்டிய பகீர் வீடியோ சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணி ஒருவர் வாங்கிய உணவின் உண்மையான விலை 80 ரூபாய் மட்டுமே. ஆனால், அவரிடம் அங்கிருந்த வெண்டர் (Vendor) 130 ரூபாய் கேட்டு கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளார்.

இதனை அந்தப் பயணி நியாயப்படி தட்டிக்கேட்டு, தனது மொபைலில் வீடியோ எடுக்க முயன்றபோது ஆத்திரமடைந்த அந்த ஊழியர், “உன்னை ஓடும் ரயிலில் இருந்து கீழே தூக்கி வீச எனக்கு அதிக நேரம் ஆகாது” என கேமராவிலேயே ஓப்பனாக மிரட்டல் விடுத்துள்ளார். ​இந்த அதிர வைக்கும் வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய ரயில்களில் நடக்கும் அப்பட்டமான சுரண்டல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட ஐஆர்சிடிசி (IRCTC) மற்றும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த அராஜகத்தில் ஈடுபட்ட ஊழியரின் உரிமத்தை ரத்து செய்து கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மேலும், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இதுபோன்ற கூடுதல் கட்டணச் சுரண்டல்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தவறு நடக்கும் பட்சத்தில் உடனடியாக அதிகாரப்பூர்வ ஹெல்ப்லைன் எண்களில் புகார் அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.