பா.ஜ.க. மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று நெல்லை வந்தார். அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “தமிழ் மண்ணை வணங்கி உரையை தொடங்குகிறேன். புண்ணி பூமியான இந்த தமிழகத்தில் தமிழில் பேச முடியாதது வருத்தமாக உள்ளது” என்று கூறினார்.
அவர் தொடர்ந்து, “பிரதமர், முதல்-அமைச்சர், மந்திரிகள் குற்ற வழக்கில் கைதானால், அவர்கள் பதவியில் நீடிக்கக்கூடாது. 30 நாட்கள் சிறையில் இருக்கும் முதலமைச்சர் மற்றும் மந்திரிகளை பதவிநீக்கம் செய்யும் சட்டத்தை எங்கள் அரசு கொண்டு வந்தது. ஆனால் அதற்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்தனர். இருட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஸ்டாலின், கருப்புச் சட்டம் எனக் கூறுகிறார். செந்தில் பாலாஜி, பொன்முடி சிறை சென்றாலும் பதவியில் நீடித்தனர். இது தான் தி.மு.க.வின் நடைமுறை” என குற்றம் சாட்டினார்.
மேலும் அவர்,தி.மு.க.வை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். தி.மு.க. அரசின் ஊழல் பட்டியல் நீளமாக உள்ளது. “தி.மு.க. அரசு டாஸ்மாக், போக்குவரத்து, கனிம வளம் உள்ளிட்ட பல துறைகளில் ஊழலில் சிக்கியுள்ளது. தி.மு.க. கூட்டணியின் ஒரே லட்சியம் உதயநிதியை முதல்-அமைச்சராக்குவதே. அதேபோல் சோனியா காந்தியின் ஒரே லட்சியம், ராகுல் காந்தியை பிரதமராக்குவதே. ஆனால் நான் உறுதியாகச் சொல்கிறேன், ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது” என்று தெரிவித்தார்.
